திருச்சூர்:

கேரளாவில் காய்கறி புரட்சியை ஏற்படுத்தி வரும் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அங்கு நாளுக்கு நாள் மவுசு கூடி வருகிறது.


2010ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த அனுபமா என்பவர் தற்போது கேரளாவில் உணவு பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருகிறார்.

கலப்பட உணவு பொருட்களுக்கு இவர் அன்றாடம் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டு குற்றவாளிகள் பீதியடைந்தள்ளனர். கடந்த 15 மாதத்தில் மட்டும் 6 ஆயிரம் உணவு பொருள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக 750 வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்பட உணவு வியாபாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

கேரளாவில் உள்ள பல மார்க்கெட்களில் அவர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார். பல உணவு பொருட்களில் 300 சதவீதம் பூ ச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவர் அடையாளம் கண்டுள்ளார். இது மனித உடலுக்கு பயங்கர பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இந்த நிலையை போக்க கேரள மக்கள் சொந்தமாக காய்கறி பயிரிட விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வீடுகளின் பின்புறம், மாடிகளில் சொந்தமாக காய்கறி பயிரிட்டு ஆரோக்கிய உணவு உண்டு வாழ வழிவகை செய்துள்ளார். முன்பு தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு 70 சதவீத காய்கறிகள் வந்துள்ளது. ஆனால் தற்போது கேரளாவில் 70 சதவீத காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இது தொடர்பாக அனுபமாக சமூக வளை தளங்களில் மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஊழல் மிகுந்துள்ள இந்தியா போன்ற நாட்டில் நேர்மையாகவும், துடிப்புடன் ஒரு பெண் அதிகாரி செயல்பட்டு வருவது மற்ற அதிகாரிகளுக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.