Random image

தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் வெள்ள நிவாரணப்பணி புரிந்த ஐஏஎஸ் அதிகாரி

செங்கணூர்

கேரள வெள்ள நிவாரணப் பணியில் தன்னை யாரென காட்டிக் கொள்ளாமல் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி 8 நாட்களாக ஈடுபட்டுள்ளார்.

கேரளாவில் கன மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் துயருற்றனர்.   அவர்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்த சமூக தொண்டர்களும் அரசு ஊழியர்களும் மீட்புப் பணிகளை செய்தனர்.   நாடெங்கும் இருந்து நிதிகள் குவிந்தன.  அவ்வாறு யூனியன் பிரதேசமான நாகர் ஹவேலியின் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கோபினாதன் ரூ, ஒரு கோடிக்கான காசோலையை அளித்தார்.

கேரளாவின் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த கண்ணன் அந்த நிகழ்வு முடிந்ததும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியான செங்கணூருக்கு பேருந்தில் சென்றார்.   அங்கு அவர் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.  சுமார் 8 நாட்கள் பணி புரிந்த அவர் யாரிடமும் தாம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி என்றோ மாவட்ட ஆட்சியர் எனவோ தெரிவிக்கவில்லை.

இது குறித்து கண்ணன் கோபினாதன், “நான் பெரிதாக ஒன்று செய்து விடவில்லை.   உண்மையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற கேரள அரசு அதிகாரிகள்தான் பாராட்டுக்குரியவர்கள்.   நான் இங்கு ஒரு சாதாரண தொண்டன் என்னைப் பற்றி யாருக்கும் சொல்ல விரும்பவில்லை. ” என தெரிவித்துள்ளார்.