பெண் நீதிபதியை மிரட்டிய எம் எல் ஏ வுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

க்ரா

பாஜக சட்டமன்ற உறுப்பினர் உதய்பான் சவுத்ரிக்கு அரசு அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஃபதேபூர் சிக்ரியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் உதய்பான் சவுத்ரி பெண்  ஐஏஎஸ் அதிகாரியும் துணை நீதிபதியுமான கரிமா சிங் என்பவரை மிரட்டிய வீடியோ வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் உதய்பான் சவுத்ரி, பெண் நீதிபதியிடம், “நீங்கள் அரசுக்காக பணி புரிகிறீர்கள்.   நீங்கள் நீதிபதி பொறுப்பில் இருப்பதை என்னிடம் காட்டுகிறீர்களா?   நான் ஒரு எம் எல் ஏ என்பது கூட உங்களுக்கு தெரியாதா?  என்னுடைய அதிகாரம் என்னவென்பதை நீங்கள் அறியவில்லை. ” என கூச்சலிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்களும் கரிமா சிங்குக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து உதய்பான் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், ”இளைய ஐஏஎஸ் அதிகாரிகளை அர்சியல்வாதிகள் மிரட்டுவது சரியானது இல்லை.   நாடெங்கும் பல சவால்களுக்கு நடுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.   மிரட்டலுக்கு பணிந்து போகாத கரிமா சிங் கை பார்த்து நாங்கள் பெருமை அடைகிறோம்” என பதிந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சவுத்ரியின் கருத்தை அறிய செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.   அவர் தனது பதிலை மாலைக்கு மேல் சொல்வதாக கூறி விட்டார்.   அதே நேரத்தில் கரிமா சிங் இது குறித்து நேற்று புகார் அளித்த பிறகு தற்போது வரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறார்.