டில்லி:

சொந்த மாநிலத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிக ஊழல் செய்தவர்களாக உள்ளனர் என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதோடு அவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக குறைந்த அளவிலான நிலைப்பாட்டை தான் எடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சொந்த மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்பாடு இதர மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை விட குறைவாகவே உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

’சமூக பிரபலம் மற்றும் அதிகாரத்துவ செயல்திறன்’’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையினை கலிபோர்னியா, பெர்கெலி பல்கலைக்கழகம், சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், லண்டன் பொருளாதார பள்ளி அறிஞர்கள் குவோ சூயு, மரியானி பெர்டிராண்ட், ராபின் பர்கீஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த அறிஞர்கள் தங்களது முதல் அறிக்கையில் ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாட்டை அளவீடு செய்துள்ளனர். மேலும், அந்த அறிக்கையில், ‘‘மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.

இதனால் அவர்களின் செயல்பாடு அதிகரிக்கிறது. ஆனால் இதற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. இத்தகைய அதிகாரிகளை அரசியல்வாதிகள் எளிதில் வளைத்து விடுகின்றனர். சமூகத்தில் உள்ள அவர்களது தனிப்பட்ட தொடர்புகளையும் கண்டறிந்துவிடுகின்றனர்.

இதன் மூலம் அவர் லஞ்சம் பெறுவார் என்பதும் தெரிந்துவிடுகிறது. இதர மாநிலத்தில் பணியாற்ற இவர்கள் விரும்புவதில்லை. இதிலும் அரசியல் குறுக்கீடுகள் உள்ளது. கர்நாடகா, குஜராத், பீகாரில் தான் அதிகளவில் எதிர்மறையான விளைவுகள் உள்ளூர் அதிகாரிகள் மூலம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்கள் தான் அதிக ஊழல் நிறைந்த மாநிலங்களாக உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘எதிர்மறையான விளைவுகள் கிட்டத்தட்ட இல்லாத மாநிலங்களாக பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. உள்ளூர் அதிகாரிகள் பலர் பொது சேவையில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்ற விரும்புகின்றனர். 2018 பிப்ரவரி மாதம் வரை 17 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் தனியார் நிறுவன இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.