டில்லி: ஆம் ஆத்மி மீது ஐஏஎஸ் அதிகாரிகள் தாக்கு

டில்லி:

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டில்லியில் பேட்டியளித்தனர்.

அப்போது ஐஏஎஸ் அதிகாரியான மனிஷா சக்சேனா கூறுகையில், ‘‘ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக கூறவது பொய். அனைத்து துறை ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறோம். விடுமுறை நாட்களிலும் பணியாற்றுகிறோம். தலைமை செயலாளர் தாக்கப்பட்டது அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை’’ என்றார்.

போக்குவரத்து துறை செயலாளர் வர்ஜா ஜோஷி கூறுகையில், ‘‘எங்களது பணியை செய்து வருகிறோம். நாங்கள் பழிவாங்கப்பட்டோம். அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. எனது நற்பெயரை கெடுக்கும் வகையில் அரசியல் கட்சியினர் தவறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்’’ என்றார்.

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ‘‘தேவையில்லாமல் இந்த சர்ச்சையில் ஆம் ஆத்மி எங்களை தொடர்புபடுத்தியுள்ளது. சட்டப்படி பணியாற்றி வருகிறோம். ஆம் ஆத்மி தனிப்பட்ட முறையில் எங்களை விமர்சனம் செய்கிறது. தவறான தகவலை பரப்புகிறது. எந்த அமைச்சரையும் புறக்கணிக்கவில்லை’’ என்றனர்.