லாகூர்: டி-20 உலகக்கோப்பையை ஒத்திவைத்துவிட்டு, அந்த இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்தக்கூடாது என்று பேசியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.
இந்தாண்டு அக்டோபர் மாதம், ஆஸ்திரேலியாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் டி-20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், அத்தொடர் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், “இந்தியாவின் ஐபிஎல் தொடர், இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலானத் தொடர், உலகக்கோப்பை டி-20 போட்டித் தொடர் ஆகியவற்றுக்கான தேதிகளில் குழப்பம் நீடிக்கின்றன. ஒருவேளை, கொரோனா வைரஸ் காரணமாக டி-20 உலகக்கோப்பை போட்டித் தொடர் நடைபெறாவிட்டால், ஐபிஎல் தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் நடத்தப்படலாம் என்று பேசப்படுகிறது.
ஐசிசி அமைப்பில், அதிகாரம் செலுத்தக்கூடியதாக இருந்து வருகிறது பிசிசிஐ அமைப்பு. கொரோனா வைரஸைக் காரணமாகக் கூறி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டி-20 உலகக்கோப்பைப் போட்டித் தொடரை நடத்த முடியாது என்று கூறிவிடலாம். அதை ஏற்றுதான் ஆக வேண்டும். ஆனால், உலகக்கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்ட அதேநேரத்தில், ஐபிஎல் டி-20 போட்டித் தொடரும் நடந்தால், பல்வேறு சந்தேகங்களும், பல கேள்விகளும் எழுவதைத் தவிர்க்க முடியாது.
ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாட்டில், 12 முதல் 14 அணிகள் பங்கேற்கும் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்த முடியாதா? என்று மக்கள் நினைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், என்னைப் பொருத்தவரை, ஐபிஎல் தொடர் நடத்துவதற்கு சாதகமான வாய்ப்பை ஐசிசி உருவாக்கிக் கொடுக்கக்கூடாது மற்றும் அனுமதிக்கவும் கூடாது. இதன்மூலம், சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு பதிலாக, தனியார் லீக்கில் விளையாடவே இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஆர்வமாக காட்டத் தொடங்குவார்கள்.
ஐசிசி, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியம் ஆகியவை அமர்ந்து பேசி, சர்வதேச போட்டிகள் நடக்கும்போது, தனியார் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று முடிவு மேற்கொள்ள வேண்டும்.
ஐபிஎல் தொடரினால், பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்களுக்கு எந்தவித வருமான வாய்ப்பும் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.