துபாய்: ஐசிசி கூட்டம் நடந்துவரும் நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா இருந்தால், மாற்று வீரருக்கு அனுமதி, பந்தில் எச்சில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளிட்டவைகளுக்கு முறைப்படியான அனுமதி வழங்கி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. எனவே, தற்போது அந்த மாற்றங்கள் மற்றும் அதற்கான அனுமதி விபரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி முறைப்படி அனுமதி வழங்கிய புதிய பரிந்துரைகள்

புதிய மாற்று வீரர்

* டெஸ்ட் போட்டிகளின்போது, வீரர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருக்கும் பட்சத்தில், மாற்று வீரருக்கு அனுமதி வழங்கப்படும். இதை ‘போட்டி ரெஃப்ரி’ முடிவு செய்வார்.

* ‍அதேசமயம், ‘ஒருநாள்’ மற்றும் ‘டி-20’ போட்டிகளில் இம்முறை கிடையாது.

தொடர்ந்து மீறினால் கூடுதலாக 5 ரன்கள்

* தற்போது எச்சில் பயன்படுத்தி பந்தைப் பளபளப்பாக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் இதை மறந்துவிட்டு, மீண்டும் எச்சில் பயன்படுத்தத் தொடங்கினால், மொத்தம் 2 முறை எச்சரிக்கைகள் விடப்படும். இந்த 2 எச்சரிக்கைகளை மீறும்போது, ஒவ்வொரு தவறுக்கும் எதிரணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்படும்.

* அதன்பிறகு, பந்தை சுத்தம் செய்த பிறகு போட்டி தொடரும்.

நடுவர்கள் நியமனம்

* கொரோனா கால போக்குவரத்து காரணமாக, இருஅணிகளுக்கும் பொதுவான நடுவர் என்ற விதிமுறை தற்காலிகமாக நீக்கப்படுகிறது.

* மாறாக, ஐசிசி அமைப்பின் எலைட் பட்டியலில் இடம்பெற்ற, போட்டி நடைபெறும் நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்படுவர்.

* இந்தப் புதிய விதியால், டிஆர்எஸ் செல்லும் வாய்ப்பு ஒன்று கூடுதலாக வழங்கப்படுகிறது.

* டெஸ்ட் போட்டி என்றால் 1 இன்னிங்ஸில் 3 டிஆர்எஸ் மற்றும் ஒருநாள் போட்டி என்றால் 2 டிஆர்எஸ் வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

*‍ போட்டி தொடர்பான சர்ச்சைகளைத் தீர்க்க, போட்டி ரெஃப்ரிக்கு, ஐசிசி அமைப்பின் கிரிக்கெட் குழு துணைபுரியும்.

* வீடியோ மூலமான விசாரணைகள் நடத்தப்படும்.

கூடுதல் லோகோ சலுகை

* தற்போதைய இக்கட்டான நிலையில், வீரர்கள் அணியும் ஜெர்ஸியின் மார்புப் பகுதியில் தற்போது இடம்பெற்றுள்ள லோகோவுக்குப் பதில், கூடுதலாக 3 லோகோக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், கிரிக்கெட் வாரியங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்கு வழியேற்படும்.