ராகுல் டிராவிட்டுக்கு ”ஹால் ஆஃப் ஃபேம்” விருது வழங்கி கௌரவித்த ஐசிசி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு ”ஹால் ஆஃப் ஃபேம்” விருது வழங்கி ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சாதனை படைத்த வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கி கௌரப்படுத்துகிறது. இந்நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இவருடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான கிளெய்ர் டெய்லரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
Rahul
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை ராகுல் டிராவிட் பெயரை சாதனை படைத்த வீரர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த விருதை இந்தியாவை சேர்ந்த ஐந்தாவது நபராக ராகுல் டிராவிட் பெறுகிறார். இதற்கு முன்பு பிஷான் சிங் பேடி, கபில்தேவ், சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே ஆகியோர் ”ஹால் ஆஃப் ஃபேம்” விருதை பெற்றுள்ளனர். அதிக ரன்கள் எடுத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பாண்டிங் மற்றும் ஜாகுஸ் காலிசை தொடர்ந்து நான்காவது இடத்தில் ராகுல் டிராவிட் உள்ளார். இவர் 168 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களை எடுத்துள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில் “ சாதனைப்படைத்த வீரர்களின் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறுவது மிகப்பெரிய கௌரவம் மற்றும் பாக்கியம். இந்த கௌரவத்தை எனக்கு அளித்த ஐசிசி-க்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இத்தகைய கௌரவம் ஒரு அணிக்கு கிடைக்கக்கூடியது. அவர்களில் இருந்து தான் நான் இந்த நிலையை அடைந்துள்ளேன். இளைஞன் ஒருவன் தனது வாழ்க்கை பயணத்தை கிரிக்கெட்டில் தொடங்கிய நிலையில் எனது கனவை நனவாக்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது பெற்றோர், குடும்பம், மனைவி, இரண்டு பிள்ளைகள், நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், பயிற்சியாளர்கள், பள்ளி காலங்களில் பயிற்சி அளித்தவர்கள் என அனைவரும் நான் இந்த நிலைமைக்கு வர காரணமாக இருந்துள்ளனர். அவர்களின் ஆதரவும் அன்பும் இந்தியாவிற்காக நான் விளையாட உதவியது. எனது மனதார அனைவருக்கு உண்மையான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

இந்தியாவின் ஏ அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட் இந்திய அணியுடன் இணைந்து இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதனால் இந்த விருதை அவரால் பெற முடியவில்லை.