துபாய்: ஐசிசி வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் விராத் கோலி இரண்டாமிடத்திற்கு சரிந்துள்ளார்.

ஒருநாள் பேட்டிங் தரவரிச‍ையில், ஐசிசி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நான்காவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் பாபர் ஆஸம். இதற்கு முன்பாக, கடந்த 1987-88 காலக்கட்டத்தில் ஜாஹிர் அப்பாஸ், 1988-89 காலக்கட்டத்தில் ஜாவித் மியான்டட், 2003 காலக்கட்டத்தில் முகமது யூசுப் ஆகியோர் ஐசிசி பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

தற்போது, அந்தப் பட்டியலில், நான்காவது வீரராக இணைந்துள்ளார் பாபர் ஆஸம். இவர் மொத்தமாக 865 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர், விராத் கோலியைவிட 8 புள்ளிகள் அதிகம் பெற்று, முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் பாபர் ஆஸம், தற்போது 6வது இடத்திலும், டி-20 போட்டிக்கான தரவரிசையில் 3வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.