ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றியை தொடர்ந்து 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

சிசி ஒருநாள் தரவரிசை போட்டிகளில்  ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வெற்றியை தொடர்ந்து இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அதே நேரத்தில், ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியினர் சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் போட்டிகள் மற்றும் தொடர்களில் விளையாடியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி 122 புள்ளிகள் பெற்றிருந்தது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 48 ரன்களும் சேர்த்த விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி 3 இடங்கள் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று ஒருநாள் போட்டித் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், பேட்ஸ்மேன்கள் வரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 854 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3 அரைசதங்கள் அடித்து தொடர்நாயகன் விருது வென்ற தோனி(688) 3 இடங்கள் முன்னேறி 17-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

3-வது இடங்களில் இருந்து 9-ம் இடங்கள் வரை முறையே நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், இங்கிலாந்தின் ஜோய் ரூட், பாகிஸ்தானின் பாபர் ஆஸம், தெ. ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ், மே.இ.தீவுகள் வீரர் ஷாய் ஹோப், தெ.ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், பாகிஸ்தானின் பக்கர் ஜமான் ஆகியோர் உள்ளனர்

பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 808 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 719 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், 709 புள்ளிகளுடன் யஜுவேந்திர சாஹல் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உள்ளார்.

கேதார் ஜாதவ் 8 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தில் உள்ளார். வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா 7-வது இடத்திலும் உள்ளனர். 8 முதல் 10 இடங்கள் வரை இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், முஜிப் ரஹ்மான், ஜோஷ் ஹேசல்வுட் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களில் எந்த இந்திய வீரர்களும் இல்லை.