கிரிக்கெட் போட்டிகள் – ஐசிசி வெளியிட்ட புதிய வழிகாட்டு விதிமுறைகள் என்னென்ன?

துபாய்: கொரோனா தாக்கத்திற்குப் பிந்தைய கிரிக்கெட் போட்டிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், நடுவர்கள் கையுறை பயன்படுத்துவது குறித்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

அந்த அறிவிப்புகள்

* நடுவர்களிடம், தொப்பி, கண்ணாடி மற்றும் துண்டு உள்ளிட்டவற்றை வீரர்கள் தரக்கூடாது. அவற்றை அவர்களே வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

* பந்தை தொட வேண்டிய நிலை இருப்பதால், நடுவர்கள் கையுறைப் பயன்படுத்த வேண்டும்.

* வெற்றி மகிழ்ச்சியைப் பகிரும்போது, வீரர்கள் ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ளக்கூடாது.

* பயிற்சியின்போது, வீரர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

* பந்தைப் பளபளப்பாக்க, எச்சிலுக்கு பதிலாக வியர்வையைப் பயன்படுத்தலாம். கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பந்தை தொடும் வீரர்கள், தங்கள் கைகளை மூக்கு, கண், வாய் அருகே கொண்டு செல்லக்கூடாது.

* 60 வயதிற்கு மேற்பட்ட நடுவர்கள், போட்டி அதிகாரிகள், ‍மேட்ச் ரெஃப்ரிகள், இருதயம், சிறுநீரகம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் வைரஸ் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக கருதப்படுவர்.

* போட்டியில் பங்கேற்கும் வீரர், யாருக்கேனும் தொற்று உறுதியானால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார். உடன் விளையாடிய வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும், டெஸ்ட் போட்டிகளுக்காக பந்து வீச்சாளர்கள் தயாராகும் வகையிலும், அவர்கள் காயத்தில் சிக்காமல் இருக்கவும், 2 முதல் 3 மாதகாலம் அவகாசம் அளிக்கப்படவுள்ளது.