ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா!

துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேசமயம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, மூன்றாமிடத்திற்கு சென்றுவிட்டது.

இந்திய அணி மொத்தம் 430 புள்ளிகள் பெற்று, 71.7% வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. போட்டிகள் கணக்கில் 9 வெற்றிகளும், 3 தோல்விகளும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

நியூசிலாந்து அணி 420 புள்ளிகளுடன், 70% வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 332 புள்ளிகளுடன், 69.2% வெற்றிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இங்கிலாந்து அணி 352 புள்ளிகளுடன், 65.2% வெற்றிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. 5வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி 144 புள்ளிகளுடன், 40% வெற்றிகளுடன் உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றாலே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.