சென்னை

ரெயில் பெட்டித் தொழிற்சாலை எனப்படும் ஐ சி எஃப், வில்லிவாக்கத்தில் உள்ள பாழடைந்த ஏரியை புனரமைக்க திட்டம் தீட்டியுள்ளது.

ஐ சி எஃப் இன் உற்பத்தி பிரிவின் எதிரில் உள்ளது வில்லிவாக்கம் ஏரி.  ஒரு காலத்தில் இது வில்லிவாக்கம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது.  பல வருடங்களாக கவனிப்பாரற்று இப்போது பாழடைந்த நிலையில் உள்ளது.  இந்த கடும் கோடையிலும் 10 அடி வரை நீர்மட்டம் இருந்தது.  ஆனால், குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவு நீர் சேரும் இடமாகவும் இது தற்போது மாறி விட்டது.

இந்த ஏரியை சீரமைக்க ரூ ஒரு கோடி செலவில் ஐ சி எஃப் திட்டம் தீட்டியுள்ளது.  ஏரியை தூர் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், சுற்றுப் புறங்களில் அழகிய பூங்காக்களை நிறுவுதல் ஆகியவை திட்டத்தில் அடங்கும்.  அத்துடன் படகு விட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏரிக்கு அருகில் பல மரங்களை நட்டு அதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், ஏரியில் மீன்கள் வளர்க்க போதுமான ஆக்ஸிஜன் நீரில் இல்லாததால் ஏரேடர் பொருத்து ஆக்ஸிஜன் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இது முடிந்தால் இங்கு மீன் பிடிக்க ஆசைப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது மீன் பிடிக்க நல்லதொரு இடமாகும்.

ஏரியின் கரைகளில் உருவாக்கப்பட உள்ள பூங்காக்கள் ஐ சி எஃப் குடியிருப்பில் வசிக்கும் ஊழியர்களுக்கு பொழுது போக்க, உடல்பயிற்சி செய்ய, விளையாட மிகவும் உபயோகப்படும்.