டெல்லி:
ஏ.டி.எம்.ல் போலி ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தது தொடர்பான புகார் குறித்து விசாரணை நடத்த ஐசிஐசிஐ வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ரோக்தாக் பகுதியில் குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம்.ல் இருந்து வந்ததாக ஐசிஐசிஐ மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து அந்த வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘நாட்டிலேயே முன் மாதிரியாக ஒரே நாளில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுக்களின் தரத்தை ஆய்வு செய்ய பிரத்யேக இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் ஆய்வு செய்யப்பட்ட ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு விதிமுறை மீறியிருப்பதாக கண்டறியப்பட்டால், வங்கியின் மூத்த அதிகாரிகள் அதை நேரடியாக ஆய்வு செய்வார்.

அப்போது அது போலி என்பது கண்டறியப்பட்டால் உடனடியாக உள்ளூர் போலீசுக்கு தகவல் அளிக்கப்படும். வங்கி ஏ.டி.எம் நெட்வொர்கில் இருந்து போலி ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் செய்ய வாய்ப்புகள் இல்லை. ஹரியானாவில் நடந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.