டில்லி

கேரள மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆய்வுக்குழு பாராட்டி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா ஆகும்.  அதையொட்டி அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.   கொரோனா  பரவுவதில் அதிக எண்ணிக்கையில் இருந்த கேரள மாநிலம் தற்போது பாதிப்பை வெகுவாக குறைத்துள்ளது.  தற்போது கேரளாவில் 500 பேர் பாதிக்கப்பட்டு 400 பேர் குணம் அடைந்து 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கேரளாவில் தற்போது 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   கடந்த சில நாட்களாகப் பாதிப்பு மிகவும் குறைந்து வருகிறது.   இது குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ரமண் கங்ககேத்கர், “கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது.   இதற்காக அம்மாநிலம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது.  கொரோனா பரிசோதனை மற்றும் பரவுதலை கட்டுப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்குக் கேரளாவை மற்ற மாநிலங்கள் முன் மாதிரியாக கொள்ள வேண்டும்.

தற்போது நாட்டில் தினசரி 1.25 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்த வசதி உள்ளது.  இதுவரை நாம் அதிகபட்சமாகத் தினசரி 72000 பரிசோதனைகள் மட்டுமே நடத்தி உள்ளோம்.    இதை அதிகப் படுத்த வேண்டிய நிலையில் நாம் தற்போது உள்ளோம்.  கொரோனா பரிசோதனையின் போது வெகு சில வேளைகளில் தவறான முடிவுகள் வருவது முழுக்க முழுக்க மனித தவறுகளாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.