டில்லி

கொரோனா நோயாளிகளுக்குத் தேவை  இல்லாவிடில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதைத் தவிர்க்க இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் குணமடைந்தோர் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  இதன் மூலம் இவர்களுக்கு மீண்டும் கொரோனா வர வாய்ப்பில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.  இந்த நோயாளிகளில் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு அதை கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு செலுத்துவதே பிளாஸ்மா சிகிச்சை என கூறப்படுகிறது.

இவ்வாறு பிளாஸ்மா செலுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளின் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கொரோனா வைரஸுடன் போரிட்டு அவற்றை அழித்து விடுகிறது என விஞ்ஞானிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.  இந்த முறை ஏற்கனவே எச்1என்1, எபோலா, சார்ஸ் ஆகியவற்றின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்திய மருத்துவ ஆய்வுக் குழு (ஐ சி எம் ஆர்) பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் கொரோனாவின் தாக்கம் குறைவதில்லை மற்றும் இறப்பு விகிதத்தையும் அது குறைக்கவில்லை எனவும் தெரிவித்தது.  உலகின் பல இடங்களிலும் நடந்த ஆய்வின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

நேற்று முன் தினம் ஐ சி எம் ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கொரொனா தாக்கம் ஏற்பட்டு மிகவும் பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம் என ஒரு ஊகம் உள்ளது.   இவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகள் உருவாகும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.   அதே வேளையில் தானம் அளிப்போரின் பிளாஸ்மா போதிய அளவு எதிர்ப்புச் சக்தி இருக்க வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் இந்த பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளவர்களுக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.  எனவே இந்த சிகிச்சையை ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.  எனவே மாநில அரசுகள் தேவை இல்லாமல் அனைவருக்கும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்மா தானம் அளிப்போர் 15 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.  அவர் உடல் எடை 50 கிலோவுக்கும் அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களாக இருக்க வேண்டும்.  பெண்கள் கர்ப்பம் அடையாத நேரத்தில் மட்டுமே பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும்.   இந்த சிகிச்சை பெறுவோர் பாதிக்கப்பட்டு 3 முதல் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் உள்ளோருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..