சென்னை:

சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி என்று அறியப்படுவது ஜெயா டிவி.  சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான அத் தொலைக்காட்சி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து தமிழக அரசை கடுமையக விமர்சித்து வந்தது. அவ்வப்போது மத்திய பாஜக அரசை விமர்சித்தும் செய்திகள் வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

அதே போல சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்று கூறப்படும் சென்னை வேளச்சேரியில் இருக்கும் ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தச் சோதனையில் பத்துக்கும்  மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள்  ஈடுபட்டுள்ளனர். வருமானத்தை முறையாக காண்பிக்கவில்லை என்றும்  வருமான வரி சரியாக கட்டவில்லை என்றும் புகார் வந்ததன்  அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மேலும் வி.கே. சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்,  டி.வி.வி. தினகரன் இல்லம்,  சசிகலா – தினகரன் உறவினர்களான திவாகரன், கிருஷ்ணப்பிரியா ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட  பல இடங்களில் இன்று காலை முதல் வருமானவரி சோதனை நடந்துவருகிறது. ஜெயலலிதா ஓய்வெடுக்கும் இல்லமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவிலும் சோதனை நடக்கிறது.

நேற்று தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான கடைசி கட்ட விசாரணை நடைபெற்றது. அதேபோல, டி.டி.வி.தினகரன் நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்திருந்தார். இந்த சூழலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உளளது.