டெல்லி:

ஐசிஎஸ்இ எனப்படும் இந்திய மேல்நிலைக் கல்வி சான்றிதழ் அமைப்பு சார்பில் 6ம் வகுப்பு பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைந்த அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒலி மாசு குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒலி மாசு ஏற்படுத்தும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரெயில், கார், விமானம் என்று இந்த வரிசையில் மசூதியும் இடம்பெற்றுள்ளது. 13வது பாடத்தில் 202வது பக்கத்தில் இது இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இதற்கு ஆத்திரத்துடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐசிஎஸ்இ வாரியம் பாடப் புத்தகத்தில் இஸ்லாமிய விரோத போக்கை கடைபிடிக்கிறது என்று வாட்ஸ் அப்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிப்பக உரிமையாளரான ஹேமந்த் குமார் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தவறுதலாக நடந்துள்ளது. அடுத்த பதிப்புகளில் இது சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஏற்கனவே அச்சடித்த ஆயிரகணக்கான புத்தகங்களை திரும்ப பெற அவர் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. இந்த புத்தகத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஆன்லைன் மூலம் புகார்கள் குவிந்து வருகிறது.