சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட பிரதமர் மோடியே காரணம், பொன். மாணிக்கவேல் இல்லை என்று சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.


தமிழக சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐஜி பொன். மாணிக்கவேல், ஓய்வுக்கு பின்னரும் ஓராண்டு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனம் சரி என்று தீர்ப்பு வெளியானது.


கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியான இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சில முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்று கூறி பொன். மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பொன். மாணிக்கவேல் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது.


அதில் சிலை கடத்தல் விசாரணை பற்றியோ, அது தொடர்பான அறிக்கைகள் பற்றியோ அவர் தாக்கல் செய்யவில்லை. எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்வது கிடையாது.
ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் பிரதமர் மோடி வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே மீட்கப்பட்டன. பொன். மாணிக்கவேலின் முயற்சியால் அவை மீட்கப்படவில்லை,


அந்த சிலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்க மறுக்கிறார், அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறார் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.