Random image

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு: சிபிஐக்கு அவகாசம் கொடுத்து ஒத்திவைப்பு

சென்னை:

மிழகத்தில் நடைபெற்று வந்த சிலை கடத்தல் தொடர்பான வழக்கு மற்றும் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை மத்திய அரசு தமிழக அரசிடம் கோரியுள்ளதாக உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து சிபிஐக்கு அவகாசம் கொடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது தொடர்பான ஆவணங்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், டில்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குநர் அலுவலகம் அளிக்கும் பதிலைப் பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என சி.பி.ஐ. வழக்கறிஞர்  கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  சி.பி.ஐ. விசாரிக்க மறுத்துவிட்டால், என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் தெரிவித்த தமிழகஅரசு வழக்கறிஞர்,  சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதையடத்து,  சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரி விக்க சிபிஐ-க்கு அவகாசம் கொடுத்து வழக்கு 24ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.