தஞ்சையில் திருடுபோன கோவில் சிலைகள்: காவல்துறை விசாரணை

கும்பகோணம் அருகே திரௌபதை அம்மன் கோவிலில் இரு வெண்கல சிலைகள் திருடப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தில் திரௌபதை அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் திரௌபதை அம்மன், பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன், கிருஷ்ணர்  உட்பட பல வரலாற்று சிலைகளும், சாமி சிலைகளும் உள்ளன. தஞ்சை மாவட்டத்தின் பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில், நள்ளிரவில் சிலர் கதவை உடைத்து, திரௌபதை மற்றும் அர்ஜூனன் சிலைகளை திருடிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததும், சிலைகள் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், வழக்கு பதிந்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.