ஈரோடு அருகே வாய்க்காலில் மீன்பிடித்த போது வலையில் சாமி சிலை ஒன்று சிக்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள காலிங்கராயன் வாய்காலில், சமீபத்தில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.  தேங்கிய வாய்க்கால் நீரில் மீன் பிடிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனது நண்பர்கள் 5 பேருடன் வாய்காலில் வலை விரித்துள்ளார். அப்போது வலையை இழுக்க முடியாமல் 6 பேரும் திணறியுள்ளனர். வாய்க்காலில் இறங்கி பார்த்தபோது, வலையில் சாக்குமூட்டை ஒன்று சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை மேலே எடுத்துவந்த அவர்கள், மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் வலம்புரி விநாயகர் சிலையும், நடராஜர் சிலையும் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அருகில் உள்ள மலையம்பாளையம் பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், கொடுமுடி மண்டல துணை வட்டாட்சியர் வான்மதி, ரமேஷ், கார்த்தி ஆகியோரிடம் சிலைகளை ஒப்படைத்து, தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுச் சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவலர்கள், இச்சிலைகள் ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.