மங்களூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு மர்ம பை! சந்தேக நபர் பெங்களூரில் சரண்

மங்களூர்:

ங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு மர்ம பை தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ள நிலையில், சந்தேக நபர் பெங்களூர் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலம், மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 20ந்தேதி கேட்பாரற்ற நிலையில் மர்ம பை ஒன்று கிடந்தது. இதை கண்ட , பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உடனே மங்களூரு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர் , அந்த மர்ம பையை மீட்டு,  சோதனை செய்தனர். அப்போது, அதில், வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது.  அந்த கருப்பு நிற பையில் பேட்டரி, வயர், டைமர் வாட்ச், வெடிகுண்டிற்கான சாதனங்கள், வெடிகுண்டை இயக்க செய்யும் டெடோன்டோர் கருவி, வெடிமருந்து எல்லாம் இருந்துள்ளது.  அதையடுத்து, அந்த பையை வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து, வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி உள்ளனர்.  இதனால் உடனடியாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  மர்ம பை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும், கர்நாடகாவில் உள்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களும், பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,வெடிகுண்டு பை வைத்ததாக  சந்தேகிக்கப்படும் நபர்  ஆதித்யா ராவ் பெங்களூரு போலீசில் சரணடைந்தார். அவரை விசாரிக்க மங்களூரு போலீசாரின் விசாரணைக் குழு பெங்களூரு விரைந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.