8 வழி சாலை வந்தால், இந்த அரசுக்கு ஆபத்து!: சாமியாடிய பெண் அருள்வாக்கு

எட்டு வழிச்சாலை அமைந்தால் இந்த அரசுக்கு  ஆபத்து என சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி கிராமத்தில் ஒரு பெண் அருள்வாக்கு கூறியிருக்கிறார்.

சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இத்திட்டத்துக்காக  சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் நிலம் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. . இதனால் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என வளங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதற்கு    5 மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டன.

 

இந்நிலையில், இந்த பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி மக்கள் தீர்மானித்தனர்.  தங்கள் கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு விவசாயிகள், பெண்கள் அனைவரும் கூடினர். எதிர்ப்பினை வெளிப்படுத்த எல்லோரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். அவர்கள் தங்கள்  கையில் ஒரு கோரிக்கை மனுவும் வைத்திருந்தனர்.  அதில், சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு,  நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை தடுத்து  நிறுத்தும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அந்த மனுவை கோயில் பூசாரியிடம் கொடுத்து அம்மன் காலடியில் மக்கள் வைக்க சொன்னார்கள். அதன்பின்னர் அம்மனிடமே அந்த மனுதரப்பட்டது. பிறகு அம்மனுக்கு அனைவரும் பொங்கலிட்டனர்.

அப்போது பக்தை ஒருவருக்கு திடீரென்று “சாமி” வந்தது. அருள்வாக்கு கூறத் தொடங்கினார். அப்போது அவர், “யார் நிலத்தையும் எடுக்க விட மாட்டேன். எடுக்கப்பட்ட நிலத்தை உரியவர்களுக்கே திருப்பி தருவேன், இது சத்தியம், ஒருவேளை 8 வழி சாலை இங்கே வந்தால், இந்த அரசுக்கு ஆபத்து” என்று சாமியாடினார்.

இதையடுத்து, “மக்கள் மட்டுமல்ல.. கடவுளும் எட்டுவழி சாலையை எதிர்க்கிறார்” என்று மக்கள் பேசிக்கொண்டனர்.