கோவை

கொரோனா பரவுவதையும் மதத்தையும் இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.   இதில் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த தப்லிகி ஜமாத் கூட்டம் எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் டில்லி நிஜாமுதின் பகுதியில் இருந்த மசூதியில் தப்லிகி ஜமாத் கூட்டம் ஒன்று நடந்தது.  இதில் சுமார் 9000 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.  இவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர்.   வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது.

அவர்கள் மூலம் அந்த மாநாட்டில் வந்தவர்களில் பலருக்குப் பரவி உள்ளது.  அவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்றதால் அங்கும் கொரோனா பரவி உள்ளது.  அவ்வகையில் தமிழகத்தில் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதையொட்டி மதத்தையும் கொரோனாவையும் இணைத்து பலரும் பேசத் தொடங்கினர்.

நேற்று கோவையில் வீட்டுக்கு காய்கறிகள் விநியோகம் செய்யும் திட்டத்தைத் தொடங்கி வைத்த மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, “கொரொனா வைரஸ் மதம் மற்றும் ஜாதியைப் பார்த்து பரவுவது கிடையாது.  அவ்வாறு கூறுவது மிகவும் தவறான செயலாகும்.

எனவே இந்த கொரோனா நோய் பரவுவதையும் மதத்தையும் இணைத்து யாரும் பேச வேண்டாம்  அதை மீறுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.  இந்த வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.