எனக்கு ஏதும் நேர்ந்தால் மோடிதான் பொறுப்பு : அன்னா ஹசாரே

லேகான் சித்தி

மக்கு ஏதும் நேர்ந்தால் அதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரே தெரிவித்துளார்.

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை அமைக்க அன்னா ஹசாரே பல முறை உண்ணாவிரதம் இருந்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய பாஜக அரசு லோக்பால் அமைக்கவில்லை.   மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.

இவற்றை உடனடியாக அமைக்கக் கோரி அன்னா ஹசாரே கடந்த 30 ஆம் தேதி அதாவது காந்தி நினைவு நாள் முதல் அவர் சொந்த ஊரான ராலேகான் சித்தியில்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தொடரும் அவரது போராட்டத்துக்கு அப்பகுதி மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இன்று அவரது போராட்டம் ஐந்தாம் நாளை எட்டியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் அன்னா ஹசாரே, “மக்களுக்கு நான் எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் உள்ளவன் என தெரியும். மக்கள் என்றுமே என்னை அப்படித்தான் நினைவில் கொண்டுள்ளனர். இப்போது நான் தொடங்கி உள்ள இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு என்பதையும் மக்கள் அறிவார்கள்.

நீண்ட நாட்களாக லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளேன். க்டந்த 2013 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இன்றுவரை அதை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு முக்கியமாக உள்ள காரணம் ஒன்றுதான் என எனக்கு தெரியும்.

பிரதமர் உள்ளிட்ட யார்மீதாவது தகுந்த ஆதாரத்துடன் லோக்பால் சட்டத்தில் புகார் அளித்தால் பிரதமரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதை போன்றே லோக் ஆயுக்தாவில் முதல்வரையும் மற்றும் அமைச்சர்களையும் தகுந்த ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு அளித்தால் விசாரிக்க முடியும். அதற்கு  பயந்து தான் எந்த கட்சியும் இவற்றை அமைக்க முன்வரவில்லை” என தெரிவித்துள்ளார்.