“சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால் அம்மாவும் அதிமுகவும் இருந்திருக்கவே முடியாது”: பொதுக்குழுவில் வளர்மதி பகீர்

சென்னை,

நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத்தொடங்கி உள்ளன.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது.

அதிமுகவுக்கு புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நேற்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஷ்வரா திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

இதில் அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவை  அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்வது குறித்து, முன்மொழிந்தபோது, சிலர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுக்குழு நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்டது.

பொதுக்குழுவில் கலந்துகொண்ட பெரும்பாலோனோர் சசிகலாவுக்கு ஜால்ராவே போட்டு வந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரான பா.வளர்மதி பொதுக்குழுவில் பேசியதாவது,  அவரது பேச்சு பொதுக்குழுவினரையே அதிர செய்துவிட்டதாம். பொதுக்குழு மற்றும் செயற்குழுவினர்களும் வாயடைந்து போய்விட்டனர்.

வளர்மதி:

1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார். அதிமுகவும் இருந்திருக்காது என்று பகீர் தகவலை கொடுத்து அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பொன்னையன்:

அதிமுக கொள்கை பரப்பு செயலாளரான பொன்னையன்,  அதற்கு ஒருபடி மேலே சென்று, சின்னம்மா மட்டுமல்ல, சின்னம்மா குடும்பமே அதிமுக எனும் கட்சிக்கு ஓடாய் உழைத்தது என ஒரே போடாய் போட்டார்.

எம்ஜிஆர் காலகட்டத்தில் அதிமுக வினரால் கொடிக்கூட ஏற்ற முடியாத நிலை இருந்தது. சின்னம்மா சகோதரர் திவாகரன், அரிவாளுடன் சென்று பல கிராமங்களில் அதிமுக கொடியேற்றி னார் என பரபரத்தார்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவை பார்க்கவிடாததற்கு ஒரே காரணம், அம்மாவுக்கு இன்பெக்ஷன் ஆகிவிடும் என்பது மட்டுமல்ல, அந்த இன்பெக்ஷ்ன் உங்களுக்கு வந்துவிடும் என்பதால்தான்  இந்த முடிவை எடுக்கப்பட்டதாக பொன்னையன் கூறியது அதிமுக உண்மை தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை தோற்றுவித்ததாம்.

வெறும் தலையாட்டி பொம்மைகளாகவும், செம்மறியாடுகளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த கூட்டம், ஜெ. இருக்கும்வரை ஒரு வார்த்தைகூட பேச அருகதையற்ற, அடிமைகள், இன்று அவர் இல்லை என்றதும் வாய்க்கு வந்தபடி உளறுகிறார்கள்…. என்று பல உண்மை விசுவாசிகள் முனுமுனுத்தனர்.

பொதுக்குழுவில் அதிமுக தலைவர்கள் பேசிய பேச்சை, விலாவரியாக வெளியிட்டுள்ளது பிரபல தமிழ் வாரம் இருமுறை வெளியாகும் இதழ்.