தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி வெளியேற்றப்படுவார் : யோகி

தராபாத்

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய தலைவர் ஓவைசி ஐதராபாத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என உபி முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரக் களத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசாரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை அதிகம் கூறி வருகிறார். சமீபத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தங்கள் கட்சிக்கு இஸ்லாமியர்களில் 90% பேர் வாக்களிப்பார்கள் என கூறியதற்கு யோகி காங்கிரஸுக்கு தலித் மற்றும் பழங்குடியினர் வாக்குகள் தேவை இல்லை என கூறியதாக பிரசாரம் செய்தார்.

யோகி தற்போது இஸ்லாமியக் கட்சி தலைவரான ஓவைசி மீது நேரடி தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளார். ஐதராபாத் நகரிலும் மற்றும் சுற்றுப் புறங்களிலும் ஓவைசி கட்சிக்கு நல்ல ஆதரவு உள்ளது. அந்தப் பகுதிகளில் உள்ள 24 தொகுதிகள் ஓவைசியின் கோட்டை என கூறப்படுகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

யோகி தனது பிரசாரத்தில், ”முன்பு நிஜாம் ஐதராபாத்தை விட்டு வெளியேற்றப் பட்டார். தற்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியும் ஐதராபாத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். பாஜக அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஆனால் அராஜகம் செய்வோரை விரட்டி அடிக்கும்.

பாஜக அனைத்து மதம் மற்றும் ஜாதியை சேர்ந்தவர்களை ஒன்றாகவே பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு மட்டும் நற்பணி திட்டங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க பிரிவினையை உண்டாக்கும் செயலாகும்.” என கூறி உள்ளார்.