மும்பை:

கடந்த 2014-ம் ஆண்டைவிட 100 தொகுதிகள் குறைவாக கிடைத்தால், பிரதமர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்யும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.


மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் ராவுத், “பாஜக கடந்த முறையை விட 100 தொகுதிகள் குறைவாக பெற்றால், பிரதமர் யார் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்யும்” என்றார்.

தொடர்ந்து பாஜகவை விமர்சித்துவிட்டு, மோடியை மீண்டும் பிரதமராக முன்நிறுத்துவது முரண் இல்லையா? என்ற கேள்விக்கு, ” நாங்கள் எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேவைத்தான் முன் நிறுத்துகிறோம். பீகாரில் நிதிஷ்குமார், பஞ்சாபில் பர்காஷ் சிங் பாதல் தான் முன்னிறுத்தப்படுகிறார்கள்” என்றார்.

பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை சிவசேனா முன்னிறுத்துகிறதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “கட்காரியை நாங்கள் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தவில்லை. பத்திரிகைகளும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தான் அவ்வாறு சொல்கின்றன” என்று பதில் அளித்தார்.

“அதுபோன்ற எவ்வித நிபந்தனையையும் தாங்கள் விதிக்கவில்லை என்றும், கட்காரி மட்டுமல்ல, பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பாஜகவில் ஏராளமானோர் உள்ளனர்” என்றார்.

“டந்த தேர்தலைவிட இம்முறை 100 மக்களவைத் தொகுதிகள் குறைவாக பாஜக பெற்றால், பிரதமர் யார்? என்பதை தேசிய ஜனநாயக கூட்டணிதான் முடிவு செய்யும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.