சபரிமலை வரும் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் எச்சரிக்கை

திருவனந்தபுரம்:

பரிமலை கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கூறி உள்ளார்.

சபரிமலை ஐப்பசி மாத பூஜை நாளை மறுதினம் (18ந்தேதி) தொடங்க உள்ள நிலையில், பெண்கள் சிலர் கோவிலுக்கு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், மாநிலம் முழுவதும் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் வர உச்சநீதி மன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தை தொடர்ந்து, மாநில அரசுக்கு 48 மணி நேரம் கெடு விதிப்பதாக வும், அதற்குள்   கேரள அரசு நல்ல தீர்வை எட்டாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாஜக எச்சரித்து உள்ளது.

இதற்கிடையில் இன்று உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ள பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தி னர் மற்றும் முக்கிய அமைப்பினருடன், திருவாங்கூர் தேசம் போர்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பிரனாயி விஜயன்,  ‘‘சபரிமலை விவகாரத்தில் எங்கள் நிலைபாட்டை ஏற்கெனவே தெளிவாக தெரிவித்து விட்டோம். தனிப்பட்ட முறையில் மாநில அரசுக்கு நிலைப்பாடு இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமே நாங்கள் செயல்படுத்துகிறோம்.

யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள மாநில அரசு அனுமதிக்காது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையில், ஐப்பசி மாத பூஜைக்கு செல்ல  பெண் பத்திரிகையாளர் உள்பட சில பெண்கள் புறப்பட்டு  வந்தனர். அவர்களை காவல்துறையினர்  நிலக்கல் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.