டில்லி,
திறந்தவெளிகளில் குப்பையை எரித்தால் 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தேசிய பசுமைத்  தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
தடையை மீறி குப்பைகளை எரித்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
குப்பைகளை திறந்த வெளிகளில் எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுநல மனு ஒன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி சுவதந்தர்  குமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு
தனிநபரோ அல்லது உள்ளாட்சி உள்பட பிற அமைப்புகளோ, திறந்த  வெளியில் குப்பையை எரிக்கும் போது, சுற்றுச்சூழல் இழப்பீடாக அபராதம்  செலுத்தியாக வேண்டும்.
சிறிய அளவிலான குப்பையை எரித்தால் ஒரு முறைக்கு ரூ.5  ஆயிரமும், குப்பைக் கிடங்கு போல் மொத்தமாக எரித்தால் ஒரு முறைக்கு ரூ.25  ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 4 வாரங்களில் ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
மேலும், மெல்லிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது  குறித்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும், அனைத்து மாநில அரசுகளும் 6  மாதங்களுக்குள் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
இதுதவிர, 2016ம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மைச் சட்ட விதிகளை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறி உள்ளார்.