18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவித்தால் மேல்முறையீடு வாபஸ்: டிடிவி தினகரன்

சென்னை:

குதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவது வாபஸ் பெறப்படும் என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

முதல்வர் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், உச்சநீதி மன்றம் அறிவித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சட்டப்படி சரியே என்று கூறி மீண்டும் தீர்ப்பு கூறினார்.

இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பதவி இழந்த 18 பேரும், டிடிவி தினகரனுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், 18 தொகுதிகளிலும் காலியாக இருப்பதாக தமிழக சட்டமன்றம் அறிவித்தால், டிசம்பர் மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  18 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம்  இடைத்தேர்தல் அறிவித்தால், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவது வாபஸ் பெறப்படுவது குறித்து முடிவெடுப்போம் என்று கூறி உள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் என்னையே ஆதரிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.