நாகர்கோவில்

பிரபல பத்திரிகையாளர் இந்து என் ராம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் திமுக அவரை காக்கும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல்  நடக்க சுமார் ஒரு மாதத்துக்கு மேல் உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.   காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரை ஆற்றினார்.

அப்போது ஸ்டாலின், ”நடைபெற உள்ள மக்களவை தேர்தல் இந்திய மக்களின் இரண்டாவது சுதந்திர போராட்டமாகும்.  தமிழகம் மற்றும் இந்தியா அகிய இரண்டும் அதிமுக மற்றும் பாஜக்வை விழ்த்துவதன் மூலம் சுதந்திரம் அடையும்.   இது தேர்தல் அல்ல சுதந்திர போர்.  நாம் பாசிச மோடியிடம் உள்ள அதிகாரத்தை பறிக்கும் போரில் ராகுலுடன் இணைந்துள்ளோம்.

நான் இந்தியாவை இருளில் இருந்து வெளியேற்றி ஒளிர வைக்க ராகுலிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.  நரேந்திர மோடி புதிய உடை, புதிய தொப்பிகள் அணிந்து உலகை சுற்றி வருகிறார்.  அதனால் இந்தியா ஒளிரவில்லை.   இந்தியாவுக்கு வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என பொய் சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார்.  தற்போது இந்தியா காண்பதெல்லாம் விழ்ச்சி, வீழ்ச்சி, விழ்ச்சி மட்டுமே.

தற்போது மோடி துக்ளக் தர்பார் நடத்தி வருகிறார்.  அவர் அரசில் ஊழல் இல்லை என மோடி சொல்கிறார்.  ரஃபேல் ஊழல் ஒன்று போதாதா?  இந்த விவரம் வெளி வந்த போது அதை அரசு பொய் என மறுத்தது.  ஆனால் இந்து பத்திரிகையின் என் ராம் விமானம் ஒவ்வொன்றுக்கும் 41% அதிக விலை கொடுத்து வாங்க உள்ளதை நிரூபித்துள்ளார்.   அதனால் ஆவணங்கள் திருடபட்டதாக என் ராம் மிரட்டப்படுகிறார்.

இந்து என் ராம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் திமுக கண்டனம் மட்டும் தெரிவிக்காது,  அவரை காப்பாற்றவும் செய்யும்.  திரு மோடி அவர்கள் இந்து மற்றும் ராம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார்.  தற்போது இந்து மக்கள் அவருக்கு எதிராக உள்ளனர்.   பத்திரிகையாளர் ராமும் எதிராக உள்ளார்.” என பேசி உள்ளார்.