புதுடெல்லி: வரும் காலங்களில், மத்திய அரசால், மாநிலங்களுக்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது என்று நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் & ஊரடங்கு காரணமாக, வரிவசூலில் நிலவும் தேக்கத்தால், இந்த நெருக்கடி உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இத்தகவலை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
‘புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சி நிறுவனங்களுக்கு நிதியளித்தல்’ என்பது தொடர்பாக விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து விவாதிப்பதற்கு வற்புறுத்தப்பட்டது.
இந்நிலையில், இது மாநில அரசுகளை எந்தளவிற்கு பாதிக்கும் என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. ஏனெனில், மாநிலங்களின் வரி வருவாயைப் பறித்துக்கொள்ளும் மத்திய அரசு, அவற்றுக்குரிய நிதியை தருவதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறது.
இதுதொடர்பாக, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், ஏற்கனவே மத்திய அரசை கேள்விக் கேட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுவரும் நிலையில், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் தாமதங்கள் மாநிலங்களின் நெருக்கடியை மேலும் அதிகரிக்கின்றன.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் மோடி அரசு கை வைத்ததால், உள்ளூர் அளவில் நடைபெறக்கூடிய பல மேம்பாட்டு பணிகள் முடங்கியுள்ளன.
மேலும், மத்தியில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையானது, நடைமுறை சாத்தியங்கள் சார்ந்ததாக இல்லாமல், யூக வருவாயின் அடிப்படையிலேயே சமர்ப்பிக்கப்படுவதாக காங்கிரஸ் உறுப்பினர் மனீஷ் திவாரி குற்றம் சாட்டுவதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
ஒரு மாநில அரசின் வருவாயில், ஜிஎஸ்டி என்பது 60% என்ற அளவைக் கொண்டிருப்பதால், அது தொடர்பான இழப்பீட்டு நிதி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், கொரோனாவும் சேர்ந்துகொண்டதால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் மாநிலங்கள் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையில், மாநிலங்களுக்கான நிதி அதிகாரமும் பெரியளவில் பிடுங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி, விற்பனை வரி, மோட்டார் வாகன வரி மற்றும் கலால் வரி போன்றவைதான் மாநிலங்களுக்கான முக்கிய வருவாய் ஆதாரம். ஆனால், கொரோனா காரணமாக, மோட்டார் வாகன வரி மற்றும் கலால் வரி வருவாயில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பல மாநிலங்கள், தங்களின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பல்வேறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கர்நாடக அரசாங்கம், 12000 வீட்டுவசதித் துறை இடங்களை ஏலம் விட முடிவெடுத்திருப்பதை நாம் இதற்கு உதாரணமாக கூறலாம்.
சில மாநிலங்கள், தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் வருவாய் இழப்பில் சிக்கிக் கொண்டுள்ளதால், தங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு முழுமையாக கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றன.
மார்ச் மாத ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசின் சார்பில் ரூ.13806 கோடி விடுவிக்கப்பட்டது. மொத்தத்தில், கடந்த 2019-20ம் நிதியாண்டில், மத்திய அரசின் சார்பில் விடுவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.1.65 லட்சம்.
மாநிலங்களின் நிதி அதிகாரம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இழப்பீடு வழங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், நிலைமை பெரியளவில் மோசமாகும் என்பது உறுதி.
நன்றி: த நியூஸ் மினிட்