கொல்கத்தா:

சீனா, நேபாள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள ராஜாங்க உறவு தோல்வியால் மேற்கு வங்க மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிக்கிமை சீனா ஆக்ரமிக்க நேரிட்டால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு. இரு நாடுகளுக்கும் இடையில் இருப்பதால் மேற்கு வங்க மாநிலம் தான் சிக்கி தவிக்கிறது. நேபாளம், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய மாநிலங்களுக்கு மேற்குவங்கம் தான் நுழைவு வாயிலாக இருக்கிறது.

பங்களாதேஷூடன் நாங்கள் சீரான உறவை கொண்டுள்ளோம். கடந்த 1ம் தேதி விஹெச்பி.யால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா உருவ பொம்மை எரிக்கப்பட்டவுடன் நான் வெளியுறவு துறை அமைச்சருடன் பேசினேன்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘டார்ஜிலிங் அருகில் உள்ள பசுபதி நுழைவு வாயிலில் உள்ள சுமார் 400 பள்ளிகளில் சீன மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. இதை கண்டுபிடிக்காமல் மத்திய அரசின் உளவு அமைப்புகளான ஐபி, எஸ்எஸ்பி, ரா, என்ஐஏ ஆகிய என்ன செய்து கொண்டிருக்கிறது.

பங்களாதேஷில் உள்ள சத்ஹிரா மாவட்டம் வழியாக மேற்கு வங்க மாநிலம் வர ஜமாத்துக்கு யார் அனுமதி கொடுத்தது. அவர்களுக்கு எப்படி எல்லை கதவு திறந்தது. அவர்கள் ஹசினாவுக்கு எதிரானவர்கள். மேற்கு வங்கத்தில் வன்முறை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் மாநில மக்கள் நல்லவர்கள். அவர்கள் அந்த முயற்சியை முறியடித்துவிட்டனர். போலி வீடியோ காட்சிகளை சமூக வளைதளங்களில் பரப்பி வன்முறையை தூண்ட முயற்சித்தனர். மேற்குவங்கம் பாஜ.வுக்கு எளிதான இலக்காக இருக்க முடியாது’’ என்றார்.

‘‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொன்றோ அல்லது துப்பாக்கி சூடு நடத்தியோ அல்லது மேற்கு வங்கத்தை அழிக்கும் நோக்கில் வன்முறையை தூண்டியோ கால் ஊன்றலாம் என்று பாஜ நினைக்கிறது. தவறுகளை பாஜ செய்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எதிர்த்து போராடினால் சிபிஐ, அமலாக்க பிரிவு, வருமான வரித் துறையை வைத்து மிரட்டுகிறது. நாங்கள் எதற்கு தலை வணங்கமாட்டோம் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன்’’ என்று மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.