குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறினால் நாட்டை விட்டு வெளியேறுவோம் : அசாம் தலைவர்

கௌகாத்தி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அசாம் மாநில 70 போராட்ட அமைப்பினர் நாட்டை விட்டு வெளியேறுவோம் எனக் கூறி உள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மத்திய பாஜக அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடி பெயர்ந்துள்ள இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

குறிப்பாக எல்லைப்புற மாநிலங்களான அசாம், மிஜோரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. மிசோரம் மாநிலத்தில் நடந்த குடியரசு தின விழாவை இந்த மசோதவை எதிர்த்து பல அமைப்புக்கள் புறக்கணித்தன. அசாம் மாநிலத்தில் நல்பரி மாவட்டத்தில் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.

மாணவர் அமைப்பினர் அந்தப் பகுதிக்கு வந்த மத்திய மாநில அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றனர். பாஜக தொண்டர்கள் அவர்களை தடுத்து கற்களால் தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்தனர். செய்தி அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் பாஜக தொண்டர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அசாம் மாநிலத்தில் இதை எதிர்த்து போராடும் 70 அமைப்புக்களின் தலைவரான அகில் கோகாய் செய்தியாளர்களிடம், “அசாமை சேர்ந்த எங்கள் அமைப்பினர் இந்த சட்டத்திருத்த் மசோதாவை கடுமையாக எதிர்க்கிறோம். எனவே எங்களை மதித்து இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதுவே எங்களுக்கு அரசு மதிப்பு கொடுப்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

ஆனால அரசு எங்கள் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ளாமல் இந்த மசோதாவை சட்டமாக்கினால் அசாமியரான நாங்கள் அனைவரும் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுவோம். நாங்கள் இந்திய நாட்டுடன் இருப்பதையே விரும்புகிறோம். ஆனால் அவ்வாறு முடிவெடுக்க மத்திய பாஜக அரசு எங்களை தூண்டுகிறது” என தெரிவித்துள்ளார்.