சென்னை

வழக்குகளில் கீழமை நீதிமன்றம் பிறப்பிக்கும் இழப்பீட்டுத் தொகைகளை,  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், அவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என உயர்நீதிமன்ற பதிவுத்துறை  தீர்ப்பாயங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இளைஞர் ஒருவர் பணியில் இருந்தபோது உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அவரது குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, சம்பப்பட்ட நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. மனுமீது நீதிபதி எஸ்.வைத்தியநாதன்  விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து பரபரப்பு உத்தரவினை வழங்கினார்.

அதில், இந்த வழக்கில், பலியான இளைஞரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத் துறைதுணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதன்படி அந்ததொகையை வங்கியில் டெபாசிட்செய்யாமல் நிறுவனங்கள் மேல்முறையீட்டு ஆணையங்களிலோ அல்லது உயர் நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்வதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பது தாமதமாகிறது.

எனவே கீழமை நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் இழப்பீ்ட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் டெபாசிட் செய்யாமல் மேல்முறையீடு செய்யக்கூடாது.

இந்த வழக்கில் தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை 3 மாதத்துக்குள் விபத்து நடந்த நாளில் இருந்து 12 சதவீத வட்டியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும்.

இதுபோன்ற மேல்முறையீட்டு வழக்குகளை பட்டியலிடுவதற்கு முன்பு இழப்பீட்டுத் தொகை டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா என்பதை உயர் நீதிமன்ற பதிவுத் துறையும் உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை இழப்பீட்டு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றமும், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களும் விசாரணைக்கு ஏற்கக் கூடாது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.