நீதிபதி லோயா மரண வழக்கில் தேவைப்பட்டால் மறு விசாரணை : சரத் பவார் அறிவிப்பு

மும்பை

சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் குறித்துத் தேவைப்பட்டால் மறு விசாரணை நடத்தப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதியான பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திடீரென மரணம் அடைந்தார்.    அவர் அப்போது சோராபுதின் ஷேக் என்கவுண்டர் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.  இந்த வழக்கில் பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.    நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானதா எனப் பல கேள்விகள் எழுப்பி உள்ளார்.

நீதிபதி லோயாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் சோராபுதின் வழக்குத் தீர்ப்பு குறித்து அவரை ஒரு சிலர் நிர்ப்பந்தம் செய்து வந்ததாகவும் லோயாவின் குடும்பத்தினர் செய்தித் தாள்களில் தெரிவித்தனர். அத்துடன் இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.   இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

தற்போது சிவ்சேனா கட்சியின் கூட்டணியில் உள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது.   சரத் பவார் சமீபத்தில் ஒரு மராட்டிய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த போது, “நீதிபதி லோயாவின் மரணம் குறித்த வழக்கில் விசாரணை தேவை என யாராவது கோரினால் அல்லது விசாரணை தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை செய தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி