அன்றே, பழமாக நழுவி பாலில் விழுந்திருந்தால்..?

ஒரு கட்சியில் கிச்சன் கேபினெட்டின் செல்வாக்கு இருக்கலாம்தான்; ஆனால் கட்சியே கிச்சன் கேபினெட்டாக இருந்தால், அந்தக் கட்சி அடையக்கூடிய வளர்ச்சி என்பது எதுவுமில்லை.

அப்படியே இருந்தாலும்கூட, அந்த கிச்சன் கேபினெட், புத்திசாலித்தனமாகவும், சூழல்களுக்கு ஏற்ப வளைந்துகொடுத்து முடிவெடுக்கும் தன்மை கொண்டதாகவும், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் உள்ளதாகவும் இருப்பது நலம். ஆனால், அப்படியும் இல்லை.

அதேசமயம், தான் நினைப்பதுதான் நடக்க வேண்டும், தான்தான் பெரிய ஆள், மற்றவர்கள் தன்னிடம் வளைந்து வர வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தால், மிஞ்சுவது எதுவுமிருக்காது.

மேலே சொன்ன அனைத்தும் பொருந்துவது தேமுதிக என்ற ஒரு கட்சிக்குத்தான்!

போட்டியிட்ட முதல் 2 தேர்தல்களின் முடிவில், 10% வாக்குவங்கியை சேர்த்து, முதல்வர் கனவுடன் மாஸ் காட்டிவந்த விஜயகாந்த், தன்னுடன் வைத்திருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு வெறும் 41 இடங்களுக்கு ஜெயலலிதாவின் தலைமையில் சரணடைந்து, தன் லட்சியத்தைக் காவு கொடுத்தார்.

அதன்பிறகு, 2014 மக்களவைத் தேர்தலில் ஆர்ப்பாட்டமாக 14 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் மண்ணைக் கவ்வி, ஓட்டுவங்கியிலும் ஓட்டை விழுந்தபோதும், 2016 சட்டமன்ற தேர்தல் காலம் என்பது அவர்களுக்கானதாக இருந்தது.

திமுக என்ற பெரிய கட்சி, விஜயகாந்தை தனது கூட்டணியில் சேர்த்து, 80 இடங்களைத் தரப்போகிறது, 60 இடங்களைத் தரப்போகிறது மற்றும் 50 இடங்களைத் தரப்போகிறது என்றெல்லாம் செய்திகள் கிளம்பின.

ஆனால், எப்படியாயினும், அந்த இடங்களின் எண்ணிக்கை கட்டாயம் 50க்கு குறைவில்லாமல்தான் இருந்திருக்கும் தேமுதிக அங்கேப் போயிருந்தால்!

கலைஞர் கருணாநிதி என்ற மிக மூத்த அரசியல்வாதி, ‘பழம் நழுவி பாலில் விழுமென காத்திருக்கிறோம்’ என்று சொல்லுமளவிற்கு மவுசு ஏறியிருந்தது தேமுதிகவுக்கு..!

ஆனால், திமுக ஜெயித்தால், எதிர்காலத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிடுவார்; எனவே, எக்காரணம் கொண்டும் ஸ்டாலின் அரியணை ஏறுவதை அனுமதிக்கவே கூடாது என்ற தனிப்பட்ட லட்சியத்தை வைத்திருந்த சிலரின் பேச்சைக் கேட்டு, கிச்சன் கேபினட்டே வடிவமாக இருந்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. விளைவு, அவர்கள் எந்த ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்டார்களோ, எந்த ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டார்களோ, அதே ஜெயலலிதா, தனிப்பெரும்பான்மையுடன் அரியணையில் மீண்டும் அமர்வதற்கு சிவப்புக் கம்பளத்தை விரிக்காத குறையாக முக்கிய காரணகர்த்தாவாக மாறினார்கள்.

மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரிலான ஒரு கூட்டணி, தேர்தலில் விஜயகாந்தை இணைத்துக்கொண்டு களமிறங்கியதற்கும், அதில் விஜயகாந்த் இணைந்ததற்கும் கைமாறாக, பல பெட்டிகள் இடம்மாறின என்று வெளியான செய்திகள் குறித்து நாம் இங்கே ஆராயத் தேவையில்லை.

முதலமைச்சர் வாய்ப்பு என்பது 2011 சட்டமன்ற தேர்தலிலேயே முடிந்துபோன ஒன்று என்ற நிலையில், 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து, கணிசமான இடங்களில் போட்டியிட்டிருந்தால், அக்கட்சி குறைந்தபட்சம் 30 இடங்களுக்கு மேல் வென்று, தமிழக சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்திருக்கும் மற்றும் அதன் வாக்குவங்கி புத்துணர்ச்சி பெற்றிருப்பதோடு, கட்சியின் செல்வாக்கும் கணிசமாக கூடியிருக்கும்!

அதன்மூலம் 2019 மக்களவைத் தேர்தலில் அவர்கள் கூட்டணியை தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் இருந்திருப்பார்கள். அங்குமிங்கும் பேரம் பேசி, சவடால் விட்டு, கடைசியாக 4 சீட்டுகளுக்கு காலில் விழுந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

பேர அரசியலில் ஒரு புதிய சாதனையாக, அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே சமயத்தில் கதவுகளைத் திறந்துவைத்துக்கொண்டு, எங்கே அதிக லாபம் என்று துண்டுவிரித்து கணக்குப்போட்ட ஒரு அருவெறுப்பு அரசியலை, தமிழக வரலாற்றில் செய்த ஒரே கட்சி என்ற சிறப்பையும் தேமுதிக பெற்றது. இதைப்பார்த்து பாமக போன்ற கட்சிகளே ஆடிப்போயின என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பதின்ம வயது தொடங்கி அரசியலில் சிறிதுசிறிதாக வளர்ந்து ஆளாகியிருக்கும் ஸ்டாலினுடன், அரசியலில் தோற்றுப்போன சிலருடன் சேர்ந்து, ‘நீயா – நானா’ கோதாவில் விஜயகாந்தும் அவரின் கிச்சன் கேபினெட்டும், 2016 சட்டமன்ற தேர்தலின்போது குதித்திருக்க வேண்டிய அவசியமேயில்லை.

ஸ்டாலின் கட்சியின் தலைவராவதும், தமிழகத்தின் முதல்வராவதும் திமுகவினர் மற்றும் தமிழக வாக்காளர்கள் சார்ந்த பிரச்சினை!

திமுகவுடன் 2016 தேர்தலில் இணைந்திருந்தால், இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கும் கட்சியை வலுவாக வைத்திருந்திருக்கலாம். ஒரு ராஜ்யசபா இடத்திற்காக அதிமுகவை மிரட்டிப் பார்த்து, கெஞ்சிப்பார்த்து, கடைசியில் அசிங்கப்பட்டிருக்க வேண்டிய தேவையிருந்திருக்காது!

67 வயதிலிருக்கும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த உத்தரவாதங்கள் கிடைக்காத சூழலில், தேமுதிகவின் கிச்சன் கேபினெட் இன்னும் கொஞ்சம்கூட மாறியதாகத் தெரியவில்லை.

அரசியல் என்பது ஓய்வின்றி, இறுதிவரை கற்றுக்கொண்டேயிருக்கும் ஒரு பல்கலைக்கழகம். அங்கே, நிரந்தர ஆசிரியரும் இல்லை; நிரந்தர மாணாக்கரும் இல்லை. சூழல்கள்தான் ஸ்தானத்தை தீர்மானிக்கின்றன..!

இப்பல்கலையின் ஒரு அங்கமாக தேமுதிக நீடிக்குமா, இல்லையா? என்பதை அடுத்துவரும் ஒரு பொதுத்தேர்தல் தீர்க்கமாக முடிவு செய்யுமா..?

 

– மதுரை மாயாண்டி