பொதுச் செயலாளராக யாரை நியமித்தாலும் திமுகவில் பூகம்பம்தான்: அமைச்சர் உதயக்குமார்

சென்னை: திமுகவின் பொதுச்செயலாளராக யாரை நியமித்தாலும் அக்கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்று தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார்.

அவர் கூறியதாவது, “கடந்த 43 ஆண்டுகளாக, திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் முதுபெரும் தலைவர் அன்பழகன். அவரின் பதவி குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை.

ஏனெனில், அவர் மூத்தவர் மற்றும் முனைவர். அவரை நாம் இனமானப் பேராசிரியர் என்றுதான் அழைக்கிறோம். அவர் இல்லாத நிலையில், தற்போது அக்கட்சியில் யாரை பொதுச் செயலாளராக நியமிக்கப் போகிறார்கள்?

இப்போதைய சூழலில், அக்கட்சியில் யாரைப் பொதுச் செயலாளராக அறிவித்தாலும் பூகம்பம்தான் வெடிக்கும்” என்றார் அமைச்சர். வருவாய்த்துறை அமைச்சரின் திமுக குறித்த இந்தக் கருத்து சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.