கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: திமுக அழைத்தால் ஆலோசிப்போம்….! ஓபிஎஸ்

சென்னை:

றைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தால் அதுகுறித்து பரிசீலிப்போம் என்று தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் வரும் 30ந்தேதி நந்தனத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அகில இந்திய தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாரதியஜனதா தலைவர் அமித்ஷாவும் கலந்துகொள்கிறார். இது பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது. ஏற்கனவே கருணாநிதி உடல்நிலை பாதிப்பு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஸ்டாலினிடம் அமித்ஷா தொலைபேசி மூலம் நலம் விசாரித்த நிலையில், தற்போது நினைவேந்தல் நிகழ்வுக்கு வருவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,   கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி கலந்துகொள்ள திமுக அழைப்பு விடுத்தால்,  அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.