திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி அருகே சிறுகனூரில் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்தார். அவரின் உறுதிமொழிகளாக வளமான ஏற்றத்தாழ்வற்ற தமிழகம், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி என 7 துறைகளில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு துறையின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வி சுகாதாரத்துக்கு செலவிடப்படும் நிதி 3 மடங்கு அதிகரிக்கப்படும்.

சமூக நீதியின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும். மனிதர்கள் மலம் அள்ளும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு முழுவதுமாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான  கல்வி உதவி தொகை 2 மடங்காக உயர்த்தப்படும் என்று கூறினார். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு திமுக நடத்தும் முதல் பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.