விழுப்புரம்: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கானை குப்பம்  பகுதியில் பிரசாரம் செய்த  ஸ்டாலின், அங்கு மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் மனுக்களை பெற்றவர், இறுதியில் உரையாற்றினார். அப்போது,   நாங்கள் சொல்வதை தான் ஆளுங்கட்சியினர் செய்கின்றனர் என்று தெரிவித்துடன்,  திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.  மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
அதிமுக அரசு டெண்டர் விடுவதிலும், ஊழல் செய்வதிலும் தான்அக்கறை செலுத்துவாக குற்றம் சாட்டியவர், திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்த ஆட்சியில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஸ்டாலினால் குறைகளை கூற முடியாது என முதல்வர் கூறுகிறார். கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே போதும், இந்த ஆட்சியின் குறைகளை கண்டுபிடித்து விடலாம்.
விழுப்புரத்தில் தடுப்பணை இடிந்து விழும் சப்தம், தாராபுரம் பாலம் விரிசல் விழும் சத்தம் கேட்கும். கரூரில் மினி கிளினிக் விழும் சப்தம் கேட்கும். நாமக்கல்லில் மருத்துவ கல்லூரிஇடிந்துவிழுந்த சப்தம் கேட்கும். இப்படி இடிந்து விழும் சப்தம் கேட்டாலே அது பழனிசாமி அரசு தான் என புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தில் பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தமிழகம் சிக்கி தவிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில்,  விழுப்புரம் நகர அதிமுக இளைஞர் பாசறை துணை தலைவர் திரு. செந்தில், பாமக முன்னாள் நகர செயலாளர் திரு. ஸ்ரீராம், கோலியனூர் ஊராட்சி கழக அதிமுக செயலாளர் திரு. கிருஷ்ணன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.