சென்னை: இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டசபைத் தொகுதிகளுக்கான மோதல், அடுத்த 2021ம் ஆண்டின் சட்டசபைத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்புகிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள், முதலமைச்சர்கள் மாற்றம், ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், தினகரன் கட்சி வாக்குகளைப் பிரித்தாலும்கூட, 9 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்ததோடு, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பல்வேறான பராக்கிரமங்களைக் கையாண்டு வெற்றிபெற்றுவிட்டது அதிமுக.

திமுகவோ, அக்கட்சியினுடைய குறுநில மன்னர்களின் தெனாவெட்டு, அலட்சியம், சுயநலம், போட்டி-பொறாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அனைத்தையும் கோட்டைவிட்டு நிற்கிறது.

மறைந்த கலைஞர் கருணாநிதி தலைமையேற்றது முதல், திமுக என்பது கட்டமைப்பு ரீதியாக, குறுநில மன்னர்களின் கட்சியாகவே இருந்து வருகிறது. அக்கட்சியின் பல்வேறு தேர்தல் தோல்விகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

அதேசமயம், இத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் அக்கட்சி நிலைத்து நிற்பதற்கும், இந்தக் குறுநில மன்னர்கள் கட்டமைப்பே முக்கிய காரணம் என்று கூறுவோரும் உண்டு.

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் இந்த நிலையில், திமுகவின் வசம் இருந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபையில் 101 உறுப்பினர்களைக் கொண்டிருந்த திமுகவின் பலம் தற்போது 98 என்றாகிவிட்டது.

தான் வலுவாக இருக்கும் நாங்குநேரி தொகுதியையும் திமுக குறுநில மன்னர்களால் கோட்டைவிட்டு விட்டது. தற்போது, அடுத்தாண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் சூழலில், திமுக வசமிருந்த திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் ஆகிய தொகுதிகளை அதிமுகவிடம் இழந்தால், அது அக்கட்சிக்கு பெரிய எதிர்மறை விளைவாகிவிடும்.

தொண்டர்கள் மனதளவில் சோர்ந்து விடுவார்கள் என்பதோடு, அதிமுக முகாமில் அந்த வெற்றியானது பெரிய உளவியல் உற்சாகத்தை உண்டாக்கும். எப்படியிருந்தாலும், தேர்தல் சமயத்தில் சில உத்திகளைப் பயன்படுத்தினால் நம்மால் கட்டாயம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் அதிமுக முகாமில் அந்த வெற்றி உண்டாக்கிவிடும்.

ஒருவேளை 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக ஆட்சியமைக்கத் தவறினால், அது அந்தக் கட்சி எழ முடியாத ஒரு நிலையை உண்டாக்கிவிடும் என்றே அரசியல் விமர்சகர்கள் பலர் எச்சரிக்கிறார்கள்.

திமுகவைப் பொறுத்தவரை, கட்சியின் தலைமையை சில குறுநில மன்னர்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள் என்ற பேச்சு உண்டு. மேலும், திமுகவில், குறுநில மன்னர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகவும் அரிதானவை மற்றும் மேம்போக்கானவை.

ஆனால், அதிமுக போன்ற கட்சிகளில் நிலைமையே வேறு மற்றும் அதுபோன்ற கட்சிகளின் அமைப்பு முறைகளும் வேறுமாதிரியானவை.

எனவே, எப்பாடுபட்டாவது திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உள்ளது. அந்த வெற்றியானது, கட்சித் தொண்டர்களின் மனநிலைக்கு ஒரு ஊக்கமாக இருப்பது மட்டுமின்றி, பிரசாந்த் கிஷோர் போன்றவர்களின் முக்கியத்துவத்தையும் அக்கட்சியில் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்.