திருவனந்தபுரம்:

இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் வலது கை, இடது காலை வெட்டுவோம் என்று தனக்கு மிரட்டல் வந்திருப்பதாக பிரபல மலையாள எழுத்தாளர் கேபி ராமன் உன்னி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கேரளாவில் வசிக்கும் பிரபல மலையாள எழுத்தாளர் ராமன் உன்னி. வயது 60. இவர் கேரள சாகித்ய அகடமி, வயலார் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். அவர் எழுதிய பல கதைகள் திரைப்படங்களாக வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அவருக்கு வந்த கடிதம் ஒன்றில், “நீங்கள் இந்து மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள். இது போன்ற எழுத்துகள் அப்பாவி இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிற கபீர்களுக்கும், இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாதவர்களுக்கும் தவறான வழியைக் காட்டும்.

நீங்கள் ஆறு மாதத்திற்குள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும். இல்லையென்றால் டிஜே ஜோசப் போல், உங்களது வலது கையையும், இடது காலையும் வெட்டுவோம். உங்களுக்கான தண்டனை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ராமன் உன்னி, “ இந்த கடிதம் ஆறு நாட்களுக்கு முன் வந்தது. மதத்தின் பெயரால் சண்டையிடுபவர்கள் அதனை நிறுத்தி கொள்ள வேண்டும்” என்றார். முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து, “இது போன்று கொலை மிரட்டல் விடுவதையும், சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டுவதையும் ஏற்க முடியாது. இப்படி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.