டொனால்ட் டிரம்ப் தோற்றால் மிகவும் வருந்தக்கூடிய நபர் நரேந்திர மோடி..!

இன்னும் சில நாட்களில்(நவம்பர் 3) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தேசிய வாக்கெடுப்பில், டிரம்ப்பை விட, ஜோ பைடன் முந்தியுள்ளார். இந்தத் தேர்தலில் ஜோ பைடன்தான் வெல்வார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 2016ம் ஆண்டைப்போல், ஏதேனும் அதிசயம் நடந்தால், மீண்டும் டிரம்ப்பே வெற்றி பெறலாம்.

டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால், உலகளவில் அவரின் ஆதரவாளர்களாக கருதப்படும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் துருக்கிய அதிபர் எர்டோகன் ஆகியோர் மிகவும் வருந்துவர் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், இவர்களையெல்லாம்விட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் வருந்துவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இவர் தனது அமெரிக்கப் பயணத்தில், அமெரிக்க இந்தியர்கள் அதிகமாக வாழும் ஹாஸ்டன், டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் டிரம்ப்புடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு, அவருக்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை மறக்கலாகாது.

தற்போதைய நிலையில், ‍அமெரிக்காவில் சுமார் 12 லட்சம் இந்தியப் பூர்வீக வாக்காளர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில்கூட, ‍இந்தியாவிற்கு டிரம்ப்பை அவரின் குடும்பத்தினருடன் வரவழைத்து, பெரியளவில் வரவேற்பு கொடுத்தவர் மோடி.

இது, வெளிநாட்டில் தனக்கு எவ்வளவு பிரபல்யம் உள்ளது என்பதைக் காட்டுவதற்கு டொனால்ட் டிரம்ப்பிற்கு பயன்பட்டது. நிலைமை இப்படியெல்லாம் இருக்கையில், இந்தத் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தால், அது மோடிக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, நடுநிலை வகிப்பது என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தனது ஆட்சியில் அப்பட்டமாக மீறியுள்ளார் மோடி என்பதும் கவனிக்கத்தக்கது.