சென்னை:

சென்னையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை  வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், அவர்களது பெற்றோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 18வயதுக்கு கீழே உள்ள சிறுவர்கள்   வாகனம் ஓட்டுவதை மோட்டார் வாகனச் சட்டம் 1988 தடை செய்கிறது.  சட்டத்தின் உட்பிரிவு 3ன் படி உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் யாரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்றும், பிரிவு 4ன் படி, 18 வயதுக்குக் குறைவான யாரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வாகனங்களை ஓட்ட அனுமதி அளிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால், அவர்களுக்கு பதில் அவர்களின்   பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமை யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

அதன்படி, வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோருக்கு ரூ.1000 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் சிறுவர்கள் பலர் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டியும், பந்தயங்களில் ஈடுபட்டு வருவதால், ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கவே தற்போது காவல்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.