இவிஎம் போய்விட்டால், பாரதீய ஜனதாவும் தானாக போய்விடும் – சொல்வது யார்?

--

மும்பை: எலெக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நடைமுறையிலிருந்து நீங்கும்போது, பாரதீய ஜனதா கட்சியும் தானாகவே அரசியல் வானிலிருந்து காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.

ராஜ்தாக்கரே, மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோராட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மற்றும் ஸ்வாபிமானி ஷேட்கரி சங்கதன் தலைவர் ராஜு ஷெட்டி ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது, தேர்தல்களில் மறுபடியும் வாக்குச்சீட்டு முறையையே நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இதை வலியுறுத்தும் வகையில் மும்பையில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி பெரிய பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, நவநிர்மாண் சேனா தரப்பில் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கும் இயக்கமும் நடத்தப்படவுள்ளதாக கூறினர்.

கடந்தவாரம் இந்த கோரிக்கை தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் ராஜ்தாக்கரே. அப்போது மம்தா பானர்ஜி தங்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார். அதேசமயம், அவருக்கு வேறு அலுவல்கள் உள்ளதால் ஆகஸ்ட் 21ம் தேதி பேரணியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

அவரின் கட்சி எதிர்வரும் மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடுமா? என்பது குறித்து கேட்டதற்கு பதிலளிக்க மறுத்த ராஜ்தாக்கரே, தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பினால் ஒழிய, நாட்டின் ஜனநாயகத்தை ஆபத்திலிருந்து மீட்க முடியாது என்றார்.