பெங்களூரு

சுமார் 102 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி துரைசாமி மகாத்மா காந்தி பற்றிய தனது கருத்தை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரரான தியாகி துரைசாமிக்கு தற்போது 102 வயதாகிறது.  அவர் அன்னிய ஆட்சியை எதிர்த்து வெடிகுண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அதன் பிறகு அவர் காந்தியின் அகிம்சைக் கொள்கையால் கவரப்பட்டு காந்திய வாதியாக மாறினார்.    நேற்றைய காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  அவர் செய்தியாளரிடம் காந்தி பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

துரைசாமி, “காந்தியின்  நினைவை மக்கள் மனதில் இருந்து அழிக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது.   அது ஓரளவு வெற்றியையும் அடைந்துள்ளது.   தற்போதைய ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்களால் நாம் காந்திய பாதையில் இருந்து கோட்சேவின் காலத்துக்குச் சென்றுக் கொண்டு இருக்கிறோம். அவருடைய பாதையை மீண்டும் கண்டுபிடித்து வாய்மை, அகிம்சை உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்.

தற்போதைய பாஜக அரசு மிகவும் குறுகிய தேசிய மனப்பான்மையுடன் இயங்கி வருகிறது.  இந்த அரசு ஒற்றுமையை விட பிரிவினையை அதிகரித்து வருகிறது.  காந்தி கிராம அளவில் அரசின் மையத்தன்மையை அறிவுறுத்தினார்.   அதிகாரங்களை அனைத்து மட்டத்திலும் பிரித்து அளிக்க வேண்டும் எனவும் அதுவே இந்து அரசாங்கமெனவும் கூறினார்.  அவர் கூறியதை தற்போது அரசுக்கு எதிரானதாக மத்திய அரசு முத்திரை குத்தி விட்டது.

காந்தி உயிருடன் இருந்திருந்தால் விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீர் அரசுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து விலக்கியதற்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடத்தி இருப்பார்.  அவர் மோடி மற்றும் இம்ரான்கான் இடையே பேச்சு வார்த்தைகள் நடத்திப் போர் அற்ற தீர்வு காண முயற்ச் செய்திருப்பார்.  பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டியவற்றை உடனடியாக அளிக்க வேண்டுமெனக் காந்தி உண்ணாவிரதம் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.