காந்தி கொலை வழக்கு இப்போது நடந்தால் ? : துஷார் காந்தி டிவீட்

டில்லி

காந்தி கொலை வழக்கு குறித்து காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி டிவிட்டரில்  பதிவு இட்டுள்ளார்.

தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி கடந்த 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.   தற்போது பாஜகவினர் அவரை தேச பக்தர் எனவும் காந்தியை அவர் கொன்றது சரி எனவும் பல இடங்களில் கூறி வருவது சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.

நேற்று அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் அமைக்கத் தீர்ப்பில் அனுமதி வழங்கப்பட்டது.   அத்துடன் மசூதியை அமைக்க இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் அதன் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது.

 

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு  பதிவை வெளியிட்டுள்ளார்.  அவர் அந்த பதிவில் ” காந்தி கொலை வழக்கை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரித்திருந்தால், தீர்ப்பு நாதுராம் கோட்சே ஒரு கொலைகாரன், ஆனால் அவரும் ஒரு தேச பக்தர் என்று இருந்திருக்கும்” எனப் பதிந்துள்ளார்.